குறட்டையை தடுப்பதற்கான வழிமுறையும்

   நாம் தூங்கும் போது, லேசான தூக்கத்தில் துவங்கி, ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்கிறோம். இப்படி தூங்கும் போது, வாயின் மேல் பகுதியில் உள்ள தசைகளும், தொண்டைப் பகுதியும் ஓய்வு எடுத்துக் கொள்ளும் வகையில், தளர்ந்து விடும். அப்போது, மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது, இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது. இது தான் குறட்டைச் சத்தமாக நமக்கு கேட்கிறது.

   சுவாசிக்கும் போது வெளியேறும் சப்தத்தைத்தான் குறட்டை என்கிறோம். குரல்வளை சுருங்கும் போது வெளியேறும் மூச்சுக் காற்றின் இயல்பான அளவு குறைந்த சத்தத்தை உண்டாக்குகிறது. தொண்டையின் சுவர்களில் இருக்கும் அண்ணங்களிலிருந்தும் சப்தம் உற்பத்தியாகும்.

   குழந்தைகளிடமும் குறட்டைப் பிரச்னை உண்டு, இதற்கு முக்கியக் காரணம் அடிநாய்டுகள் தான். குழந்தைகளது தொண்டையின் மேல் பகுதியில் அடிநாய்டுகள் மிகப் பெரிய அளவில் இருக்கும். இதனால் குறட்டை வரும். இரண்டு டான்சில்களும் சந்திக்கும் இடத்திலிருந்தும் குறட்டைச் சப்தம் வர வாய்ப்பு உண்டு. அதிக உடல் எடை குறட்டைக்கு முக்கியக் காரணம், இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்ந்துவிடும். முறையான உணவுப் பழக்கம் இல்லாதவர்கள் இந்த குறட்டைப் பிரச்னையால் பாதிக்கப்படுவதுண்டு.

   டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்னைகள் ஏற்படும் போதோ, சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்னைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது. கழுத்தைச் சுற்றி, அளவுக்கு அதிகமாக தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது.

   ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது, நம் கண்கள் வேகமாக அசையும். அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று, வெளியேறும். இதற்கு, 'அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே’ என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு மணி நேரத்திற்கு, 15க்கும் மேற்பட்ட முறை, நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளி வருகிறது.

   குறட்டை விடும் போது திடீரென நின்று, திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால், நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து, இதய அடைப்பு, திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம். 'அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே’ ஏற்படுவதற்கான அறிகுறிகள்: அதிக சத்தம் கொண்ட குறட்டை, பகல் நேரத்தில் மயக்கமாக இருத்தல், இரவில் வியர்த்தல், காலையில் எழுந்ததும் தலைவலி. சாதாரண மயக்க நிலைக்கும், சோர்வுக்கும், குறட்டைக்கும் இது போன்ற ஆபத்தான உபாதைக்கும் 'எப்ஒர்த்’ என்ற முறையில், வித்தியாசம் கண்டுபிடிக்கலாம்.

   சொந்த தொழில் செய்பவர்கள், பொதுத் துறை ஊழியர்கள், இலக்கை எட்ட கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது. இந்த புதிய வாழ்க்கை முறையால் ஏற்படும் நோய்களால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். கவலை, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள உயரதிகாரிகள், சாதாரண வாழ்க்கையை வாழ முடியாமல் தவிக்கின்றனர். உடற்பயிற்சி செய்ய அவர்களுக்கு நேரமே இல்லை. பள்ளிகளில் குழந்தைகள் விளையாட ஊக்குவிப்பதில்லை. மாலை நேரங்களில், 'டிவி’ பார்க்கவே நேரம் சரியாகி விடுகிறது. உடல் பருமன் அதிகரித்த நிலை, தொற்று நோய் போல பரவி விட்டது.

   ஆல்கஹால் அருந்துபவர்கள், போதை மருந்து சாப்பிடுபவர்களின் மூளையில், மூச்சு மையம் பாதிக்கப்படுவதால், அவர்களுக்கு இந்த நோய் ஏற்படலாம். தங்கள் பழக்கத்தை அவர்கள் நிறுத்தி விட்டால், குறட்டை, 'ஸ்லீப் அப்னியே’ நோயிலிருந்து மீண்டு விடலாம். மீதமுள்ள 70 சதவீதத்தினர், உடல் பயிற்சி மற்றும் சீரான உணவு முறை ஆகியவற்றை மேற்கொண்டு, உடல் பருமனைக் குறைத்தால் போதும்; இப்பிரச்னைகளிலிருந்து விடுபட்டு விடலாம். உடல் பருமனுடன் உள்ளவர்களின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன், ஆபத்தான அளவில் குறைந்து காணப்படும்.

   மனிதர்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூக்கத்தில் செலவிடுகின்றனர், சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கின்றார் என்றால் 20 வருடங்கள் தூக்கத்தில் கழிகிறது.

   குறட்டையில் மூன்று வகை உண்டு. முதலாவது மூளையின் மத்தியப் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக உண்டாவது, இரண்டாவது அப்ஸ்ட்ரக்டிவ் டைப், இது கொஞ்சம் கடுமையானது. இந்த வகையில் இயல்பான மூச்சிவிடுவதில் சிரமம் ஏற்படும், மூன்றாவது வகை மிகிஸ்ட் டைப், இது முதலிரண்டு வகையின் கூட்டணி Positive airway pressure காரணமாகவும் குறட்டை வரும்.

   மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை

   யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால் இளவயது பருமனைக் குறைக்கலாம். திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.