சிட்னி,மார்ச்.025 (டி.என்.எஸ்) அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கையை 25ஆக உயர்த்த வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரின் தூதுவராக உள்ள சச்சின் டெண்டுல்க, சிட்னியில் அளித்த ஒரு பேட்டியில் இது குறித்து கூறியிருப்பதாவது:
அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணிகளின் எண்ணிக்கை 14-ல் இருந்து 10 ஆக குறைக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முடிவு செய்திருப்பதாக அறிகிறேன். இது எனக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஏனெனில் ஒரு கிரிக்கெட் வீரனாக, முடிந்த அளவுக்கு கிரிக்கெட்டை உலக மயமாக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என்னை பொறுத்தவரை அணிகளின் எண்ணிக்கையை குறைப்பது என்பது பிற்போக்கான நடவடிக்கையாகும். ஐ.சி.சி.யில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளை (சிறிய அணிகள்) மேம்படுத்தும் வழிமுறைகளை நாம் காண வேண்டும்.
சிறிய அணிகள் ஒவ்வொரு உலக கோப்பையிலும் எப்போதும் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் அளித்துக் கொண்டு தான் இருக்கின்றன. திறமையை வெளிப்படுத்த நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தால், அவர்களால் தொடர்ந்து இதே போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை போன்ற முன்னணி அணிகளுடன் மோத அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.
இந்த நிலையில் அணிகள் குறைப்பு விவகாரம் அவர்களுக்கு எதிரான நியாயமற்ற செயல் ஆகும். ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா போன்ற அணிகள் இந்த நாட்டிற்கு சென்று ஏன் தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடக்கூடாது? உலக கோப்பையில் 14 அணிகள் என்பதே போதாது. அடுத்த உலக கோப்பையில் 25 அணிகளை விளையாட வைக்க வேண்டும். கிரிக்கெட் 6 அல்லது 7 அணிகளுக்கு மட்டும் உரியது அல்ல. கிரிக்கெட்டை உலகம் முழுவதும் விரிவுப்படுத்தி பிரபலமடையச் செய்தால், மேலும் நிறைய ரசிகர்கள் கிடைப்பார்கள்.
இவ்வாறு தெண்டுல்கர் கூறினார்.