தமிழக அரசு அறிவிப்பு:
அரசுப் பணி மற்றும் கல்விக்கான விண்ணப்பங்களில் அரசு பதிவு பெற்ற கெசட்டட் ஆபிசர் அல்லது நோட்டரி பப்ளிக் ஆகியோரிடம் சான்றொப்பம் (அட்டஸ்டேஷன்) பெற வேண்டும் என்பது விதியாக இருந்தது. இது மாணவர்கள் முதல் வேலை தேடும் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் கடும் சிரமமாக இருந்தது.
ஒவ்வொரு தடவை சான்றொப்பம் வாங்கும்போதும் கையொப்பமிடும் அதிகாரிக்கு 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை பணம் செலுத்தவேண்டும். இது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை தருகிறது. அதிலும், ஒரு சில அதிகாரிகள் சான்றிதழ் ஏதேனும் இல்லாவிட்டால் கையெழுத்திட மறுக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் கிராமப்புற மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக பழங்குடியின மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் மக்களின் சிரமங்களை உணர்ந்து இனி வரும் காலங்களில் விண்ணப்பிக்கும் நபரே தனது விண்ணப்பத்தில் சான்றொப்ப கையெழுத்தை போட்டுகொள்ள தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதற்கான உத்தரவை அரசின் அனைத்து துறைகளுக்கும் அரசு அனுப்பி வைத்துள்ளளது. கடைசி கட்ட சரிபார்ப்பு பணியின்போது ஒரிஜினல் சான்றிதழை சமர்ப்பித்தால் போதுமானது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவு இளம் தலைமுறையினருக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.