இந்திய இளைஞருக்கு 'குளோபல் சிட்டிசன்' விருது

கிராமங்களில் குறைந்த செலவில் கழிவறை வசதிகள் ஏற்படுத்தித் தந்தமைக்காக இந்திய இளைஞர் அனூப் ஜெயினுக்கு `குளோபல் சிட்டிசன்' விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுடன் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 60 லட்சம்) ரொக்கப் பரிசும் அளிக்கப்பட்டுள்ளது. 
இவர் 2011ம் ஆண்டு பிஹாரில் `ஹியூமேன்யூர் பவர்' எனும் அமைப்பைத் தொடங்கி, அதன் மூலம் இந்தியக் கிராமங்களில் சுகாதாரமான கழிவறை வசதிகளை ஏற்படுத்தித் தரத் தொடங்கினார். கடந்த வாரம் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி குளோபல் சிட்டிசன் விழாவின்போது 2019ம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து வீடுகள் மற்றும் பள்ளிகளிலும் கழிவறை வசதி ஏற்படுத்துவது தனது இலக்கு என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
தனது அமைப்பு மூலம் சுமார் 17,000 பயனாளர்களுக்குக் கழிவறை வசதிகள் ஏற்படுத்தித் தந்துள்ளார் அனூப் ஜெயின். குடியுரிமை, புதிய கண்டுபிடிப்பு, புதிய கண்டுபிடிப்பின் பயன் மற்றும் அக்கண்டுபிடிப்பின் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் வாக்களித்து இறுதியில் அனூப் ஜெயின் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.