பத்மஸ்ரீ கமல் ஹாஸன் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கமல்ஹாசன் (பிறப்பு - நவம்பர் 7, 1954, பரமக்குடி), புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் அண்மைய ஆண்டுகளில் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார்.கமல்ஹாசன் 4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளை வென்றுள்ளார், இவர் சிறந்த பிறமொழிப்படத்திற்கான அகாதமி விருதிற்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமானவற்றிலும் நடித்திருந்தார். 

நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப்பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார். இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக பத்மசிறீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சத்தியபாமா பல்கலைக்கழகம் கமல்ஹாசனிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது. 2009 இல் 50 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவுசெய்த இந்திய நடிகர்கள் மிகச்சிலரில் ஒருவரானார்.

கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.


தனது திரையுலக வாழ்க்கையை, ஒரு குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கிய கமல்ஹாசன் அவர்கள், தீவிர நாடகக் கலைஞராகவும் இருந்து வருகிறார். 1960ல் வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் முதன்முதலில் அறிமுகமான போது, அவருக்கு வயது ஆறு. அத்திரைப்படத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ‘இந்திய தேசிய விருதைப்’ பெற்றார். குழந்தை நட்சத்திரமாகப் பல திரைப்படங்களில் நடித்த இவர், ஒரு இளைஞனாக, 1970ல் வெளியான ‘மாணவன்’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலில் மற்றும் தோன்றினார். 1973ல், வெளியான கே.பாலச்சந்தர் அவர்களின் ‘அரங்கேற்றம்’ என்ற திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. துணைக் கதாப்பாத்திரமாக பல கதைகளில் நடித்தாலும், அவர் எதிர்மறையான கதாப்பாத்திரங்களில் நடித்த ‘சொல்லத்தான் நினைக்கிறன்’, ‘குமாஸ்தாவின் மகள்’ போன்ற திரைப்படங்கள் பெரிதும் பேசப்பட்டவை. 1974ல் வெளிவந்த, ‘நான் அவன் இல்லை’ திரைப்படமே அவர் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்த கடைசித் திரைப்படமாகும்.

1974ல் வெளியான ‘கன்னியாகுமரி’ என்ற மலையாளப் படம் மூலமாக கதாநாயகனாக உருவெடுத்தார். இந்தப் படம் அவருக்கு அம்மொழிக்கான ஃபிலிம்ஃபேர் விருதினைப் பெற்றுத் தந்தது. தமிழ்த் திரையுலகில் நாயகனாக அவர் அறிமுகமாகிய முதல் படம், கே.பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’. இப்படத்திற்காக, அவருக்கு ‘ஃபிலிம்ஃபேர் விருதும்’, ‘தேசிய விருதும்’ கிடைத்தது. 1970களில், ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தனர். ’16 வயதினிலே’, ‘மூன்று முடிச்சு’, ‘அவர்கள்’, ‘இளமை ஊஞ்சல் ஆடுகிறது’ போன்ற திரைப்படங்கள் அவ்விருவரின் கூட்டணிக்கு நல்ல எடுத்துக்காட்டு. பின்னர், தொடர்ந்து வெற்றிப் படங்களான ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘வருமையின் நிறம் சிகப்பு’, ‘நீயா’, ‘கல்யாண ராமன்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ராஜப்பார்வை’, ‘மூன்றாம் பிறை’ ஆகிய படங்கள் இவருக்குப் பல விருதுகளைத் தேடித்தந்தது.

அதே சமயத்தில், அவர் ஹிந்தித் திரையுலகிலும் கவனம் செலுத்தினார். ‘ஏக் துஜே கே லியே’, ‘சாகர்’, ‘ராஜ் திலக்’, கிரஃப்தார்’ ஆகிய திரைப்படங்கள் அவர் நடித்த ஹிந்தி திரைப்படங்களில் சில. 1990களில் வெளியான ‘அபூர்வ சகோதர்கள்’, ‘குணா’, ‘தேவர் மகன்’, ‘மகாநதி’, ‘குருதிப்புனல்’, ‘இந்தியன்’, ‘அவ்வை ஷண்முகி’ போன்ற படங்கள், வெற்றிகரமான பாக்ஸ் ஆஃபிஸ் திரைப்படங்களாக உருவெடுத்தன. 1990ல், அவரின் அற்புதமான நடிப்புத் திறமைக்காக, இந்திய அரசு அவருக்கு மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கியது. அன்று முதல், இவர் ‘பத்மஸ்ரீ கமல்ஹாசன்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

இரண்டு ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்குப்பின் வெளியான திரைப்படம், ‘ஹே ராம்’. இது அவருடைய சொந்தத் தயாரிப்பான ‘ராஜ்கமல் பட நிறுவனத்தின்’ படைப்பாகும். அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ், இந்த படத்திற்குத் தடை விதித்தாலும், இப்படம் பெருமளவு வெற்றியை அடைந்தது. பின்னர், ‘தெனாலி’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, ‘பஞ்சதந்திரம்’, ‘வசூல் ராஜா MBBS’ போன்ற திரைப்படங்கள் அவருடைய நகைச்சுவை உணர்வுக்காகப் பெரிதும் பேசப்பட்டவை. கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வேட்டையாடு விளையாடு’, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ‘தசாவதாரம்’ உலகளவில் பெரும் வெற்றியைத் தேடித்தந்தது. அண்மையில் அவர் நடித்து, இயக்கி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியான ‘விஸ்வரூபம்’ பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றிப் பெற்று வெளிவந்த சில நாட்களிலேயே 120 கோடி வருவாயை ஈட்டியுள்ளது.

நடிப்பைத் தவிர, அவர் பல படங்களுக்கு, பாடல்களும் எழுதியிருக்கிறார். மேலும், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் ஆங்கிலத்தில் எழுபதுக்கும் மேற்பட்டப் பாடல்களைப் பாடியும் உள்ளார். திறமைசாளியான கமல்ஹாசன் அவர்கள், பரதநாட்டிய கலைஞர் என்பதால், பல படங்களுக்கு நடனக்கலைஞராகவும் இருந்துள்ளார்.