ஜாகுவாரின் மவுசுக்கு இப்போது செம அடி!


குஜராத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் பண்ணிய ரவுசு நடவடிக்கையால், ஜாகுவாரின் மவுசுக்கு இப்போது செம அடி!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரான ராகுல் தக்கார், வெள்ளை நிற ஜாகுவார் XF காரை வாங்கினார். கிட்டத்தட்ட 70 லட்ச ரூபாய் விலை கொண்ட இந்த காரில், அதிகபட்சமாக மணிக்கு 250 கி.மீ வேகம் வரை பயணிக்கலாம்.

கார் வாங்கிய சில நாட்களிலேயே பிரச்னைகள் ஆரம்பித்துவிட்டன. ‘‘ஹெட் லைட் எரியவில்லை; பம்பர் ஆடுகிறது; இன்ஜினில் சத்தம் வருகிறது!’’ என்று ஏகப்பட்ட பிரச்னைகளுடன் ஜாகுவார் சர்வீஸ் சென்டரை அணுகினார் ராகுல் தக்கார். ஆனால், பிரச்னைகள் எதுவும் சரி செய்யப்படாமல், சர்வீஸ் சென்டரில் அப்படியே திருப்பித் தந்ததாக உணர்ந்த தக்கார், ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்தார்.

தனது ஜாகுவார் காரின் மேல் வைக்கோல்களை அடுக்கி, கழுதைகளை காரில் கட்டி, பொதி இழுத்துச் செல்வதுபோலசர்வீஸ் சென்டருக்கு இழுத்துச் சென்றார். அதுமட்டுமில்லாமல், காரில், ‘இது ஜாகுவாரா, கழுதையா? ஜாகுவாருக்கு இந்தக் கழுதைகளே மேல்!’ என்கிற ரீதியில் அடங்கிய வாசகங்களை எழுதிவைத்து, தெருத் தெருவாக ஊர்வலமாகச் சென்றார்.

‘‘நாங்கள் உலக அளவில் சிறந்த சேவையை அளித்து வருகிறோம். விரைவில் உங்கள் பிரச்னையைச் சரி செய்து தருகிறோம்!’’ என்று ஜாகுவார் டீலரின் உயரதிகாரி வாக்குக் கொடுத்த பிறகே, அங்கிருந்து திரும்பியிருக்கிறார் ராகுல் தக்கார்.

பிரச்னை தீர்ந்ததா என்பது, ராகுலின் அடுத்த நடவடிக்கையின்போதுதான் தெரியும்